முகப்பு செய்திகள் சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மூக்கிரட்டை, நெருஞ்சில், நீர்முள்ளி!

சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மூக்கிரட்டை, நெருஞ்சில், நீர்முள்ளி!

சிறுநீரகம்… இதை`கிட்னி’ (kidney) என்று சொன்னால் மிக எளிதாக எல்லோருக்கும் புரியும். உடலின் இடப்பக்கமும்,  வலப்பக்கமும் அவரை விதை வடிவில் காணப்படும் இந்த உறுப்பு பின் வயிற்றுக்குழியில் அமைந்துள்ளது. மனிதர்களைப் பொறுத்தவரை வயிற்றின் பின்புறத்தில் காணப்படுகிறது. குறிப்பாக முள்ளந்தண்டின் இரு பக்கமும், பக்கத்துக்கு ஒன்றாகக் காணப்படுகின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்கு சற்று கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலின் ஆரோக்கியத்தைக் காக்க பலவகைகளில் துணைபுரியக்கூடியது சிறுநீரகம். யூரியா போன்ற கழிவுப்பொருள்களை ரத்தத்தில் இருந்து பிரித்து நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்ற உதவும் ஓர் உடலுறுப்பு.
வளர்ந்த நாடு, வல்லரசு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக்கோளாறுகள் இருக்கிறதாம்.

நம்நாட்டில் சிறுநீரக நோய்கள் இருப்பது தெரியாமலே பலர் இருக்கிறார்களாம். இந்தியாவில் சுமார் 7 கோடி பேருக்கு பல்வேறுவிதமான சிறுநீரக நோய்கள் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தொடக்கநிலை முதல் முற்றிய நிலை வரை உள்ள இந்நோய் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதிதாக வருவது தெரியவந்துள்ளது. இதில் வேதனை என்னவென்றால் பலர் நோய் முற்றியநிலையிலேயே அதை உணர்கிறார்கள். அதன்பிறகு டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற அவஸ்தைகளை  சந்திக்க வேண்டியிருக்கிறது. அவற்றைத் தவிர்க்க எளிய வழிமுறைகள் உள்ளன.


உணவுப்பழக்கத்தால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவது, போதிய நீர் அருந்தாதது உள்ளிட்ட பல காரணங்களால் சிறுநீர் அடைப்பு ஏற்பட்டால் அதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, நாள்பட்ட சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நீண்டகால சிறுநீரக வீக்கம், உப்பு அதிகம் சாப்பிடுவது, தினமும் ஊறுகாய் சாப்பிடுவது, அதிகமாக மது அருந்துவது, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அதிக அளவு மருந்து எடுத்துக்கொள்வது, சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எம்.மரிய பெல்சின்


சிறுநீரகச் செயலிழப்பை தொடக்கநிலையில் கண்டுபிடிப்பது சிரமம். பொதுவாக களைப்பு, காரணமற்ற தொடர் சோர்வு, முக வீக்கம், தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுவது, உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு, சிறுநீரில் ரத்தம் அல்லது குறைவாக சிறுநீர் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் காணப்படும். ஆனாலும் இவற்றை பலர் உணராததால் பரிசோதனைகள் மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.  சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75 சதவிகிதம் வரை குறையுமளவுக்கு எந்தவிதமான தொந்தரவையும் தராது என்பதால் கடைசி நிலையில்தான் பாதிப்புகளை நம்மால் உணரமுடியும்.

ஏதாவது அறிகுறிகள் தென்பட்டாலும் நம்மில் பலர் ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை செய்ய தயாரில்லை. காரணம் ஆய்வகப் பரிசோதனைகளில் என்னென்ன நோய்கள் இருக்கும் என்பது தெரிந்துவிடும் என்று பயப்படுகின்றனர். அதனாலேயே பலர் நோய் இருந்தாலும்கூட பரிசோதனைகளைச் செய்ய விரும்புவதில்லை. சிறுநீர் பரிசோதனை, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டின் அளவை பரிசோதிப்பதன்மூலம் சிறுநீரகக் கோளாறு இருக்கிறதா என்று கண்டறியலாம்.


சிறுநீரகம் செயலிழக்காமல் இருக்க வேண்டுமானால், நீர் அருந்துவதில் தொடங்கி உணவு உண்பது, தவிர்ப்பது என நிறைய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் நீர் அருந்த வேண்டியது அவசியம். சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் நீர் அருந்தும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் உப்பு சேர்த்துக்கொள்வதில் அதிக கவனம் தேவை. மேலும் சிறுநீரை நன்றாக வெளியேற்ற உதவும் வாழைத்தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்க்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை வாழைத்தண்டு சாறு அருந்தலாம்.

மற்றவற்றை வாரத்தில் இரண்டு, மூன்று நாள் சேர்த்துக் கொள்வது நல்லது. 40 வயதைத் தாண்டினாலே உப்பைக் குறைக்க வேண்டும். அதிக உப்பு சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும் என்பதால் அதில் கவனம் தேவை. எளிதாக இருக்கிறது, சாப்பிட அருமையாக இருக்கிறது என்று தினமும் தயிர் சாதமும் அதற்கு இணையாக ஊறுகாய் சாப்பிடுவதும் சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தலாம்.  


எந்த அளவு சிறுநீர் வெளியேறுகிறதோ அதைப்பொறுத்து நீர் அருந்துவது நல்லது. புரத உணவுகள் தேவை என்பதற்காக சிக்கனைச் சாப்பிடுவது சரியல்ல. காய்கறிகளில் கிடைக்கும் புரதமே சிறந்தது. பாசிப்பயறில் உள்ள புரதம் சிறுநீரக நோயாளர்களுக்கு நல்லது. பொதுவாக பயறு, பருப்புவகைகள் மற்றும் கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற போன்ற தானியங்கள் உண்பதையும் தவிர்க்க வேண்டும். மாறாக பாரம்பரிய அரிசி ரகங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ரவை, சேமியா உணவுகள் உண்ணலாம்.

சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் பொட்டாசியம் சேர வாய்ப்பு உள்ளதால் அது இதயச் செயலிழப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக உள்ள பழங்களைச் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். பைனாப்பிள், பப்பாளி, கொய்யா போன்றவற்றிலும் பொட்டாசியம் இருப்பதால் அவற்றையும் தவிர்க்கலாம். கேரட், காலிபிளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக்கீரை போன்றவற்றில் சோடியம் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

இவற்றுக்குப் பதிலாக காய்கறி, கீரைகளில் அதிகமாக நீர் விட்டு நன்றாக வேக வைத்து நீரை வடிகட்டிவிட்டு மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். இது உப்புகள் உணவில் அதிக அளவு தங்காமல் பார்த்துக்கொள்ளும்.  மட்டன், சிக்கன், முட்டை போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல் மசாலா உணவுகளைத் தவிர்ப்பதும் நல்லது. குறிப்பாக ஃபிரைடு ரைஸ், தந்தூரி உணவுகளைத் தொடக்கூடாது. வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.


இவைதவிர மிகச் சாதாரணமாக கிடைக்கும் சில மூலிகைகளை சாப்பிடுவதன்மூலம் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கல்லடைப்பில் தொடங்கி சிறுநீரகச் செயலிழப்பு வரை அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். வயல் வரப்புகளின் ஓரங்களில் களைச்செடியாக வளர்ந்து நிற்கும் நீர்முள்ளிச்செடி, பொங்கல் பண்டிகையின்போது மாடுகளின் கழுத்தில் கட்டி தொங்கவிடும் சிறுகண்பூளை, வறண்ட நிலங்களில் வளர்ந்து கிடக்கும் நெருஞ்சிமுள், பூனைமீசைச் செடி போன்றவற்றை எடுத்து தேநீராக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை அடியோடு விலகிவிடும். கூடவே, மூக்கிரட்டைக் கீரையின் தண்டு மற்றும் இலையை நீரில் போட்டுக் காய்ச்சி வடிசாறாக அருந்தலாம். மூக்கிரட்டையின் இலைகளை லேசாக வதக்கி துவையல் செய்து சாப்பிட்டாலும் பிரச்சினை சரியாகும். சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் டயாலிசிஸ் செய்வதுமட்டுமே தீர்வு என்ற நிலையில் வெறும் மூக்கிரட்டையைச் சாப்பிட்டாலே அதிலிருந்து விடுபடலாம்.


மூக்கிரட்டைக்கீரையின் வேர் 10 கிராம் அளவுக்கு எடுத்து அதனுடன் சிறிது பெருஞ்சீரகத்தைச் சேர்த்து 100 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த குடிநீரைக் குடிக்கும்போது வயிற்றுக்கழிச்சல் உண்டாகலாம். அதைக்கண்டு பயப்பட வேண்டாம். கழிவுகள் வெளியேறுகிறது என்று பொருள். இரண்டு, மூன்று தடவை மலம் போனால் அப்படியே விட்டு விடுங்கள். அதிகமாக மலம் போனால் அதற்கான வைத்தியம் செய்யுங்கள்.


யானை நெருஞ்சில் எனும் பெருநெருஞ்சில் முழுத் தாவரத்தையும் நீரில் அலசினால் கிடைக்கும் ஜெல்லை வெறும் வயிற்றில் குடித்தாலும் பிரச்சினை தீரும். முதல் நாள் இரவு உளுந்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை தினமும் செய்துவந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.

கடுக்காய், அதிமதுரம், வெள்ளரிவிதையை சமஅளவு எடுத்துப் பொடியாக்கி தினமும் சாப்பிடுவது, கறிவேப்பிலைப் பொடியை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது போன்றவையும் நல்ல தீர்வைத் தரும். மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் கீழாநெல்லிச் செடியை அரைத்து சாறு எடுத்து பால் அல்லது மோரில் கலந்து குடித்துவந்தாலும் பிரச்சினைகள் சரியாகும். சாணாக்கீரையை கசாயம் வைத்துக் குடிப்பதுடன் அவ்வப்போது அந்தக்கீரையை சமைத்துச் சாப்பிடவும் செய்யலாம். பெருஞ்சீரகம், பார்லி, மஞ்சள் சேர்த்து நீர் விட்டு கசாயம் வைத்துக் குடிப்பதும் நல்ல தீர்வு தரும்.


வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி, திராட்சை, அன்னாசிப்பழம், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதும் சிறப்பான தீர்வைத் தரும். ஓமவல்லி இலையை வெறுமனே பச்சையாகச் சாப்பிடுவது அல்லது இலைகளை நீர் விட்டுக் கொதிக்க வைத்து அருந்தலாம். ஓமத்தை நீர் விட்டுக் கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். வெங்காயம் உடலில் உள்ள கழிவுப்பொருள்களை அகற்றும் சக்தி படைத்தது என்பதால் அன்றாட உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

– எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர் 9551486617

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்!

நடிகர் விஜய்சேதுபதி, கிரிக்கெட் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வௌியான நிலையில் அவரது மகளுக்கு பாலியல் ரீதியாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பன்ட்!

தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக விளையாடாமல் இருந்த டில்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பன்ட் இன்று பஞ்சாப் அணிக்கெதிராக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது கணவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார்!

சந்திரலேகா திரைப்படம் வாயிலாக சினிமாவுக்கு அறிமுகமானார் வனிதா விஜயகுமார். படம் வெற்றி பெறாததால் நாயகி வாய்ப்பை இழந்தார் இந்நிலையில் வில்லியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் சினிமாவில் நடித்து வந்தார்.

தலைக்கவசம்: ஆட்டோ டிரைவருக்கு அபராதம்; திருச்சியில் விநோதம்

தலைக்கவசம் அணியாத ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினரால் திருச்சி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது திருச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் இன் எண்ணை குறித்து...

Recent Comments