முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா தொற்றுக்கு, இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து சுகாதார செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, தனியார் மருத்துவமனைகளுக்கு, தமிழக அரசால் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய அறிக்கையை அளித்துள்ளது.
இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, கீழ்கண்ட கட்டணங்களை நிர்ணயித்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கும் அதிகபட்ச கட்டண விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளொறுக்கு அதிகபட்ச தொகுப்புக் கட்டணம் (Package) Grade A1 மற்றும் A2 மருத்துவமனைகளில் அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்கள் பொதுவார்டில் சிகிச்சைப் பெற ரூ.5,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற நாளொன்றுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.10,000 முதல் 15,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Grade A3 மற்றும் A4 மருத்துவமனைகளில் பொதுவார்டு கட்டணம் நாளொன்று ரூ.5,000 எனவும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நாளொன்றுக்கு தொகுப்பு கட்டணமாக ரூ.9,000 முதல் 13,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் பொதுமக்கள் புகார்களை 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மொத்த படுக்கைகளில் 25 சதவிகித படுக்கைகளை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க ஒதுக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்
1.அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும்
2. முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட பயனாளிகள் மருத்துவமனைகளுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.
3. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
4. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்
மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும்.
இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்து பயன் பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Arumai