பாரத் பயோடெக் நிறுவனம் தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது மிக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மிகப்பெரிய அளவிலான உயிரழப்புகளை இந்தியா எதிர்கொண்டது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமான தாக்குதலை ஏற்படுத்தியது. மேலும், மூன்றாவது அலை தாக்கும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றனர்.
இருப்பினும், தடுப்பூசி நிறுவனங்களிடம் முன்னதாக தேவை குறித்து மத்திய அரசு ஆர்டர் செய்யாததன் காரணமாக தடுப்பூசி விநியோகம் மெதுவாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு மக்கள் ஆர்வம் காட்டும் நிலையிலும் போதிய தடுப்பூசி இல்லாத காரணத்தால் தடுப்பூசி போடும் பணி தடைபெறுகிறது. மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது.
இதற்கிடையில், சென்னை செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி வளாகத்தை தொடங்கி தடுப்பூசி உற்பத்தியை தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார். தனியார் நிறுவன பங்களிப்புடன் செங்கல்பட்டு வளாகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கைவைத்தார்.
மத்திய அரசு தரப்பிலிருந்து இந்த கோரிக்கைக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், கோவேக்சின் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனம் தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான திட்ட பணிகள், கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு, மூலப் பொருட்கள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, பயோடெக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுசீந்திர இலா, செயல் இயக்குனர் சாய் பிரசாத், தொழில்துறை சிறப்புசெயலாளர், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.