தமிழகத்தில் உள்ள பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி மற்றும் கடையன் ஆகிய 6 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைத் தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை, சட்டத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இயக்குநர்களை உள்ளடக்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்குழு தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையைத் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு உரிய சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு மக்களவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றது.
அதன்பின் 6 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 6 உட்பிரிவுகளை ஒருங்கிணைந்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி மற்றும் கடையன் ஆகிய 6 பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மை செயலாளர் கே.மணிவாசன், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் வழங்க அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.