பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசு வரியை ஒரு ரூபாய் குறைப்பதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இதில், மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தாண்டியுள்ளது. இவ்விலை ஏற்றத்துக்காக காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் 63 காசுகளும், டீசல் விலை 3 ரூபாய் 84 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. 2010-க்கு பிறகு இது மிகப்பெரிய ஏற்றமாகும்.
இந்நிலையில் மேற்கு வங்க அரசு பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரியிலிருந்து 1 ரூபாயை விட்டுக்கொடுத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.
அம்மாநில நிதி அமைச்சர் அமித் மித்ரா, “ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் மத்திய அரசு ரூ.32.90-ஐ வரியாக பெறுகிறது. மாநில அரசோ ரூ.18.46-ஐ மட்டுமே பெறுகிறது.
டீசலை பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு ரூ.31.80-ஐ மத்திய அரசு வரியாக பெறுகிறது. மாநில அரசு ரூ.12.77-ஐ பெறுகிறது.
எரிபொருள் விலை ஏற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு மேற்கு வங்க அரசின் இம்முடிவு சிறிது நிவாரணம் அளிக்கும் என்றார்.