தமிழக அரசியல் களத்தில் புதிதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்தவர் சாகாயம். புதுக்கோட்டையை சேர்ந்தவர். இவரது நேர்மையின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்த அவர், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.
மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு, மணல் முறைகேடு, பெப்சி கம்பெனி நடவடிக்கை என பல ஆபத்தான நிலையில் அவருக்கு ஆதரவாக பல இளைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
எனவே தற்போது அவர் ஐ.ஏ எஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு எப்போது அரசியல் அறிவிப்பு வரும் என காத்திருந்தனர்.
சென்னை ஆதாம்பாக்கம் பகுதியில் இன்று மக்கள் பாதை சார்பில் நடைபெற்ற அரசியல் களம் காண்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிகழ்வில் சகாயம் பேசும்போது, அன்புக்குரியவர்களே இரத்த துடிப்பு உள்ள இளைஞர்களே எல்லோரும் வாருங்கள், சேர்ந்து ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம். அரசியல் கோபம் உண்டு.
ஆனால் அரசியல் பதவி ஆசை இல்லை. நான் எந்த திரைப்பட நடிகரிடமும் பேசியதில்லை. அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன்.
நான் உங்களோடு பயணிக்க ஆசைப்படுகிறேன். இளைஞர்களே கடைசி வரைக்கும் முழு நேர்மையாக, சாதியை உடைத்தெரிக்கிற லட்சிய நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.