முகப்பு செய்திகள் தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி: தேசிய மக்கள் நீதிமன்றம் அதிரடி!

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி லோகேஷ்வரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் திருவைகுண்டத்தில் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 12 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், போக்சோ நீதிமன்ற நீதிபதிகுமார் சரவணன், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி உமா மகேஸ்வரி, சார்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி, வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்பாய தலைவர் சோமசுந்தரம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆப்ரீன் பேகம், நீதித்துறை நடுவர் எண்.2 உமாதேவி, நீதித்துறை நடுவர் எண்.4 ராஜகுமரேசன் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

ரூ.15 லட்சம் இழப்பீடு: மக்கள் நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் மோட்டார் வாகன விபத்து கோரிக்கை மனு எண்.20/2019. இம்மனுவில் கண்ட விபத்தில் இறந்து போன நபர் தூத்துக்குடி மாவட்டம், மேல அழகாபுரியை சேர்ந்த திரு.சேகர் அவர்களின் மகன் துரைமுருகன் (வயது 28). அவர் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

கடந்த 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று திருச்செந்தூர் – தூத்துக்குடி ரோட்டில் தெற்கிலிருந்து வடக்காக பிங்கான் ஆபீஸ் ஜங்ஷன் அருகில் துரைமுருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவருக்கு பின்னால் வந்த தனியார் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்து போனார்.

அதற்காக நஷ்ட ஈடு கோரி அவரது மனைவி கங்கா, அவரது தாயார் மல்லிகா இழப்பீடு கோரி மேற்படி தனியார் லாரி உரிமையாளர் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் மீது இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்கள்.

மேற்படி மனு தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டு உபயதரப்பிலும் சமாதானத்தின் அடிப்படையில் மேற்படி மனுதாரர்களுக்கு, 15,00,000 நஷ்ட ஈடு தொகையை உடனடியாக வழங்க தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments