செக் மோசடி வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்ற நடிகர் சரத்குமார், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , நடிகர் விக்ரம் பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ‘இது என்ன மாயம்’. படத்தின் தயாரிப்புக்காக ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014-ம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.
பணத்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்திரவாதம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் உள்ள சொத்துக்களையும் ரேடியன்ஸ் நிறுவனத்திடம் அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த உத்திரவாதத்தை மீறி ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை இவர்கள் தயாரித்து வெளியிட்டதால் ரேடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் ராதிகா, சரத்குமார் ஆகியோர் அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் பணத்தை திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த ரேடியன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 7 காசோலைகள் திரும்ப வந்ததையடுத்து மூன்று பேருக்கும் எதிராக ரேடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது. சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏ’க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனையும் , ராதிகா சரத்குமார் மற்றும் ஸ்டீபன் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘ஓராண்டு சிறை தண்டனை என்பதை எதிர்பார்க்கவில்லை.
வழக்கு தள்ளுபடி ஆகும் என்று தான் நினைத்திருந்தேன். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளோம். குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே செக்கை வங்கியில் செலுத்தி உள்ளார்கள்.
இருப்பினும் எங்கள் தரப்பில் பிணைத்தொகையாக சொத்துக்களும் குறிப்பிட்ட தொகைக்கு மேலாகவே உள்ளது. அதனால் எங்கள் தரப்பு நியாயங்களை நாங்கள் எடுத்துரைப்போம். மேலும் தண்டனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.