தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
தற்போது மீண்டும் கொரொனோ நோய் பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்பது குறித்த சந்தேகம் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் அறிவித்தபடி நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுகள் தொடங்க உள்ள மே 3ஆம் தேதிக்கு பதிலாக ஒரு வார காலம் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகின்றது.
மே 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே பொதுத் தேர்வு துவங்க உள்ளதே இதற்கு காரணம். மற்றபடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவிகித பாடப்பகுதிகள் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் வழக்கமாக கேட்கப்படும் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பதிலாக கூடுதல் ஒரு மதிப்பெண் கேள்விகளை கேட்க அரசு தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.