கொரோனா பரவல் காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அறிவுரையின் பேரில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை செய்தும், ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
இதில், ஊரடங்கை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள் என 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ- – பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொது மக்களின் நலன் கருதி, ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும் என்று பேசினார்.