கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார். அவரது ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர். இவர் ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். தற்போது இவர் சினிமா தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகிறார்.
இவரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், ஹரி நாடார் நடிக்கும் அந்தப் படத்தின் பூஜை இன்று வடபழனியில் இருக்கும் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இப்படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் எழுதி இயக்குகிறார். மேலும் இன்று அப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
எப்போதும் நகைகளுடனே வலம் வரும் ஹரி நாடார், படத்திலும் அவ்வாறே தனது நகைகளுடன் இருப்பாரா அல்லது, படத்தின் கேரக்டருக்கு ஏற்றார் போல் சிம்பிளாக இருப்பாரா என அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ஹரி நாடாருக்கு ஜோடியாக ‘2K அழகானது ஒரு காதல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முத்தமிழ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அதில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார், “கொரோனாவுக்குப் பின் படங்கள் ஆரம்பிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது.
இந்த பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரையுலகின் ஜாம்பவான் ஆர்.பி.சவுத்ரியை நீண்ட வருடத்துக்குப் பின் சந்தித்தது என் அப்பா, அம்மாவை பார்த்தது போல் இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெள்ளித்திரையில் சில படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு பிடித்த கதைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு நடிக்கிறேன். இந்தப் படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதம் அருமையாக இருந்தது.
கிராமத்தில் இருக்கக்கூடிய சின்னச் சின்ன விஷயங்கள், காதல் சம்பந்தப்பட்ட அதாவது ஒரு பருவத்தில் ஆரம்பித்து ஒரு பருவம் வரையிலான அதன் பயணம் பற்றிய மிகவும் அழகான கதை இது. அதில் நான் ஒரு முக்கிய கேரக்டரில் ஹரி நாடார் உடன் நடிக்கிறேன். ஹரிநாடார் எனது தூரத்து சொந்தக்காரர் என்பது இப்போதுதான் தெரிந்தது” என்றார்.