முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் திறக்க தடையில்லை எனவும், அது தொடர்பான வழக்கு முடியும்வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடமை யாக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாகவும் அதனை செல்லாது என அறிவிக்க வேண்டும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஜெயலலிதாவின் இல்லத்திற்கான டெபாசிட் தொகையை செலுத்தியதால் அவரது இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதாக விளக்கம் அளித்த தமிழக அரசு, மக்கள் பார்வைக்காக ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நாளை (ஜன.,28) திறக்கவிருப்பதாக அறிவித்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாளை வேதா இல்லம் திறக்கப்பட இருப்பதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
மேலும், வேதா இல்ல பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் அவசரமாக கையகப்படுத்தி இருப்பதாகவும் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட நினைவு இல்லத்தை நாளை திறந்து வைக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு முடியும்வரை பொதுமக்களை நினைவு இல்லத்துக்குள் அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.