சாக்கில் அழுகிய நிலையில் பாட்டி மற்றும் பேத்தியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தென்காசி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கீழப்புலியூரில் குடியிருப்பவர் கோமதியம்மாள், 55. இவரது மகள் சீதாவை அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
முருகன் சீதா தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் உத்தரா என்ற மகளும் உள்ளனர். மருமகன் முருகன் ராணுவத்தின் காஷ்மீர் பகுதியில் பணிபுரிந்து வருகிறார். அதன் காரணமாக கோமதியம்மாள் தன் மகள் சீதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒன்றாகவே குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், தன் மகளுடன் இருக்கும் கோமதியம்மாள் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு தனது சொந்தக்காரர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து வந்திருக்கிறார்.
இச்சூழலில், கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று காலை கோமதியம்மாள் பணம் வாங்கி வருவதாகத் தன் மகள் சீதாவிடம் சொல்லி விட்டுத் தன் ஒன்றரை வயதுப் பேத்தி உத்தராவையும் அழைத்துக் கொண்டு போனவர் பொழுதாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, உறவினர்கள் பாட்டியையும் பேத்தியையும் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போகவே தென்காசி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் கொடுத்துள்ளனர். அது விசாரணையில் உள்ள நிலையில், ராணுவத்தில் இருக்கும் முருகனும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் குற்றாலம் காவல் லிமிட்டில் வருகிற மத்தளம் பாறையின் முத்துமாலைக் காட்டுப் பகுதி சாலையின் புதரிலிருந்து அழுகிய வாடை வரவே, தகவல் அறிந்த குற்றாலம் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் ஸ்பாட்டிற்கு வந்தனர்.
புதரிலிருந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்ததில் அதில் வயதான பெண், ஒரு குழந்தை என இருவரது அழுகிய உடல் இருப்பதைக் கண்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்ததில் அது காணாமல் போன கோமதியம்மாளும், பேத்தி உத்தரா என்றும் தெரிய வர பதை பதைப்பில் உறவினர்கள் கதறினர்.
இது குறித்து விசாரணை நடத்திய குற்றாலம் காவல் நிலைய போலீசார் கோமதியம்மாளை அறிந்தவர்களில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வட்டிக்குப் பணம் கொடுக்கல், வாங்கலில் நடந்த சம்பவமாகத் தெரிகிறது.
பேத்தியையும், பாட்டியையும் கொலை செய்து வேறு எங்கோ மறைத்து வைத்திருந்து விட்டு சாக்கு மூட்டையில் இங்கே கொண்டு வந்து போடப்பட்டது போன்று தெரிகிறது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. விசாரணை பல கோணத்தில் போகிறது என்கிறார்கள்.
பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.