பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 6வது நிதி ஆயோக் கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடியிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் 6வது நிதி ஆயோக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மோடி, கொரோனா பெருந்தொற்றின்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டது உலகளவில் இந்தியா மீது நற்பெயரை ஏற்படுத்தியதாகவும் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதைப்போல மாவட்ட அளவிலும் கூட்டாட்சி தத்துவம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நடப்பாண்டு பட்ஜெட் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக கூறிய மோடி, தனியார் துறைகளின் ஆற்றலை சுயசார்பு இந்தியா திட்டத்தின்படி அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
விவசாயத்துறையில் அதிக நிதி மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.
நாட்டில் எளிதாக தொழில் தொடங்க சட்டங்களையும், அதற்கான பணிகளிலும் மாற்ற வேண்டும் என்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
நீட், ஜேஇஇ, யுபிஎஸ்இ போன்ற தேசிய அளவிலான தேர்வு முறைகளை மறுமதிப்பீடு செய்யவேண்டும் எனவும் இந்த தேர்வுகளுக்காக அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேநிலை நீடித்தால் நெடுங்காலத்தில் தகுதி என்பதே அழிந்துவிடும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பயிற்சி மையங்கள் மூலமாக பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறும் இதுபோன்ற தேர்வுகள், லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் எனவும் இதனை நிதி ஆயோக் அமைப்பு முக்கிய பிரச்னையாக கருதாவிட்டால், வருங்காலத்தில் பெரும் சீர்குலைவுகள் ஏற்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்