முகப்பு அரசியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி கைது; மு.க.ஸ்டாலின் கண்டனம்!

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணி கைது; மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறை கைது செய்ததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுவப்பட்ட காந்தி சிலையை மாவட்ட நிர்வகம் அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக காந்தி சிலை வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட வரலாற்று பின்னணி உள்ள சிலையை மாவட்ட நிர்வாகம் அகற்றி விட்டு, முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதற்காகவே அவசரகதியில் தரமற்ற சிலை அமைத்துள்ளதாக கூறி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்திய ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ள இந்த சிலையை நிறுவுவதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், எம்.பி ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ‘ஆட்சியின் கடைசி நேரக் கொள்ளைக்காக கரூர் ரவுண்டானா பகுதியில் 70 ஆண்டுகால வரலாறு கொண்ட மகாத்மா காந்தி சிலையை அகற்றி, முதலமைச்சர் திறக்கும் புது சிலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை பழனிசாமி அரசின் ஏவல் துறையான காவல்துறை கைது செய்தது.

அதற்காகக் கையாளப்பட்ட முறையும் கடும் கண்டனத்திற்குரியவை. தமிழக மக்களின் அகிம்சை புரட்சி விரைவில் இதற்கான தீர்ப்பளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments