கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தலில் வீற்றிருக்கும் இசக்கி அம்மன், பெண் தெய்வங்களில் எல்லை தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்கிறாள்.
ஒரு பிறவியில் நடந்தது. மறு பிறவியில் தெரிவதில்லை. ஆனால், இசக்கியம்மன் கதையில் ஒரு பிறவிக்கும் மறு பிறவிக்கும் தொடர்பு இருக்கிறது.
முந்தைய பிறவியில் நடந்த சம்பவத்திற்கு மறு பிறவியில் பழி தீர்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சிவன் கோயிலில் பாரம்பரியமாக நடனம் ஆடிய தேவதாசி சத்தியவாணிக்கு, திருக்கண்ட நட்டுவன் என்ற ஆண் குழந்தையும், நவக்கியானி என்ற பெண் குழந்தையும் இருந்தன. மகள் பிறந்தபிறகு சத்தியவாணியின் வீட்டில் செல்வம் பெருக ஆரம்பித்தது. பருவவயதை அடைந்த பேரழகி நவக்கியானியின் நாட்டிய அரங்கேற்றம் வடாரண்யேஸ்வரர் பூஜைக்குப் பிறகு நடந்தேறியது. வேதியர் புவனபதிக்குச் சொந்த ஊர் காஞ்சிபுரம்.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் சந்நதி தெருவைச் சேர்ந்த இவருடைய மனைவி பிரசவத்திற்காக தாய் ஊரான சிதம்பரத்திற்கு சென்றிருந்தாள். புவனபதி, திருவாலங்காட்டில் வேதியர்களுக்கான இல்லத்தில் தங்கியிருந்து கோயிலில் பூஜை செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரத்திலுள்ள தனது இல்லத்திற்கு சென்று வந்தார்.
அப்போது நவக்கியானியைப் பார்த்தார். மனைவிப் பிரிவால் ஏற்பட்ட ஏக்கமும், நவக்கியானி மேல் கொண்ட தாக்கமும் சத்திய வாணியிடம் வலியச் சென்று அவரைப் பேசவைத்தன. புவனபதியை அன்பாக உபசரித்தாள் சத்தியவாணி. ‘உங்கள் மகள் எங்கே?’ என்று புவனபதி கேட்க, ‘அவளுக்கு ஏதாவது கொண்டு வந்தால் வருவா, சும்மா வந்து கேட்டா எப்படி?’ என்று சத்தியவாணி கூற, அங்கிருந்து புறப்பட்ட புவனபதி, கோயிலிலிருந்த அம்பாளின் நகை ஒன்றை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்தார்.
பொன்னோடு வந்ததை அறிந்து தனது பெண்ணை அவரிடம் சென்று அன்பாக பேசும்படி வற்புறுத்தினாள் சத்தியவாணி. ஆனால், நவக்கியானியோ, ‘வாருங்கள்,’ என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டாள். ‘இந்த ஒரு வார்த்தையை கேட்கதான் நான் வந்தேனா?’ என்று புவனபதி கேட்க, ’ஒத்த நகைக்கு ஒத்த வார்த்தைதான். பத்து களஞ்சி நகை கொண்டுவந்தா, பக்கத்தில உட்கார்ந்து பேசுவா, ஒட்டியாணம் கொண்டு வாங்க, கட்டிபிடிச்சு பேசுவா, கொத்தா நகை கொண்டு வந்தா, முத்தமும் கொடுப்பா’ என்று தன் பேராசையை வெளிப்படுத்தினாள் சத்தியவாணி.
ஆனால், ஒவ்வொரு நாளும் பலவித நகைகளைக் கொண்டுவந்து கொடுத்தும் எந்த பலனும் இல்லாததால் ஆத்திரம்கொண்ட புவனபதி, சத்தியவாணியுடன் சண்டையிட்டு வெளியேறினான். இதையறிந்த தேவதாசியின் மகன் திருக்கண்ட நட்டுவன், தங்கையிடம் சென்று அவள் மீது கொண்ட மோகத்தால் அர்ச்சகர் கோயில் நகைகளையும், தனது பொன்னையும், பொருளையும் தாயிடம் கொடுத்ததையும் அதனால் இன்று அவர் ஆண்டியாகி செல்வதையும் எடுத்துக் கூறினான்.
உடனே நவக்கியானி கோபத்துடன், தாயிடம், ‘உன் வேசித்தனத்திற்கு அளவே இல்லையா?’ என்று கத்தினாள். பிறகு, வேதியர் கொடுத்த நகைகள் அனைத்தையும் ஒரு துணியில் மூட்டையாக கட்டி எடுத்துக்கொண்டு புவனபதி சென்ற திசை நோக்கி நடந்தாள். கண்ணுக்கெட்டும் தொலைவில் நடந்து கொண்டிருந்தார் புவனபதி.
அவரருகே செல்ல அவர் கோபமாயிருப்பதைக் கண்டு, ‘இந்த வேப்பமரத்தடியில் அமருங்கள்’ என்ற கூறி அவருடன் தானும் உட்கார்ந்து கொண்டாள். ‘என் பெயரைச் சொல்லி என் தாய் உங்களிடம் வாங்கிய நகைகள் அடங்கிய மூட்டை இது. எனக்காகத்தானே இப்போது நீங்கள் ஓட்டாண்டியாய் நிற்கிறீர்கள்? அந்த நான் இனி உங்களுக்கு முழுதும் சொந்தம். என் தாய் தாசியாக இருக்கலாம், ஆனால், நான் தர்ம பத்தினி, இனி உங்கள் உத்தமியாக இருப்பேன், கோயில் நகைகளை கொண்டு ஒப்படையுங்கள்.
இருப்பதை வைத்து ஒழுக்கமான வாழ்வு வாழலாம்,’ என்றாள். பிறகு புதுவாழ்வு காணப்போகும் சந்தோஷத்தில் அப்படியே புவனபதி மடியில் தலைவைத்து உறங்கிப்போனாள். ‘தாசி மகள் எப்படி உத்தமியாக இருக்க முடியும்? தன்னைப்போல வேறு நபர்களிடமும் பணத்திற்காக நெறி பிறழ்ந்து இவளும் நடக்கலாமே’ என்று சந்தேகமாக யோசித்தான் புவனபதி.
அவள் தன்மீது அன்பு காட்டினாலும் அவளுடைய கற்பில் ஐயம் கொண்டான் புவனபதி. அதோடு தனக்கு மனைவி இருக்கிறாளே, இவளை எப்படி மணப்பது, உறவினர்களுக்கு எப்படி பதில் சொல்வது என்றெல்லாமும் யோசித்துக் குழம்பினான் புவனபதி.
பிறகு ஒரு முடிவெடுத்து அவள் தலையைத் தரையில் இறக்கி வைத்து, அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து அவள் தலையில் தூக்கி போட்டான். துடிதுடித்த நவக்கியானி இறக்கும் தருவாயில், ‘உன்னை நம்பி வந்த என்னைக் கொன்று விட்டாயே, உன்னை பழி வாங்கியே தீருவேன்.
நீ என்னை கொன்றதற்கு இந்த கள்ளிச்செடியே சாட்சி,’ என்று கூறி அருகே நின்ற கள்ளிச்செடியை கையால் இழுத்து தன் உடலருகே நட்டாள். பின்னர் உயிர் நீத்தாள். புவனபதி நகை மூட்டையுடன் அங்கிருந்து புறப்பட்டான்.
அதேசமயம் தன் தங்கையைத் தேடி வந்தான் திருகண்ட நட்டுவன். வேப்பமரத்தடியில் நவக்கியானி கொலையுண்டு கிடந்ததையும், அருகே கள்ளிச்செடி நடப்பட்டதையும் கண்டு திடுக்கிட்டான். அழுது புலம்பினான். பின்னர் தனது நாக்கை பிடுங்கிக்கொண்டு அங்கேயே மாண்டு போனான்.
நகை மூட்டையுடன் கால்கடுக்க நடந்து வந்த புவனபதிக்கு தாகம் வறட்ட, அருகிலிருந்த கிணற்றிலிருந்து நீர் அருந்தினார். அப்போது அவர் வைத்திருந்த மூட்டை கிணற்றுக்குள் விழுந்தது. அதேசமயம், கிணற்றின் இடுக்கிலிருந்த கருநாகம் ஒன்று அவரைத் தீண்டியது. உடனே வாயில் நுரை தள்ளியபடி கிணற்றில் விழுந்து உயிரை விட்டார் புவனபதி.
தன்னை முற்பிறவியில் கொலை செய்த வேதியர் மட்டுமல்லாது, தனது அண்ணன் இறப்புக்குக் காரணமான எழுபது வேளாளர்களையும், அவர் தம் பத்தினியரையும் பழி தீர்த்தாள் நீலி. இருப்பினும் அவளுடைய ஆங்காரம் தணியவில்லை. அவ்வழியாக வருவோர், போவோரை அடித்தாள், ஆதாளி குரல் எழுப்பி அச்சம் கொள்ள வைத்தாள்.
அவள்முன் தோன்றிய சிவன், ‘‘நீலி உனது பழிவாங்கும் எண்ணம் நிறைவேறியது. இனி சாந்தமாகத் திகழ்வாய்.
தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு மட்டும் நீலியாக ஆங்காரம் கொள். நீ யார் என்பதை இப்போது சொல்கிறேன், கேட்டுக்கொள்.
வைச்ரவ மகிரிஷியின் மைந்தனான ராவணன், இலங்கை மன்னன், சாம வேதத்தில் நிபுணன். இசையிலும் வல்லவன். மிகச்சிறந்த சிவபக்தன். ஒருமுறை தன்னை யாரும் வெல்ல முடியாத ஆற்றல் பெறுவதற்காக என்னிடமிருந்து ஆத்மலிங்கம் ஒன்றைப் பெற்று இலங்கைக்குக் கொண்டு செல்லும் எண்ணத்தோடு, கயிலாயம் வந்தான். அவனை நந்திதேவன் தடுத்து நிறுத்தியபோது, உடனே ராவணன், சாமகானம் இசைத்தான்.
அந்த இசையில் தன்னையே மறந்து உமையாளான நீ நடனமாடினாய். பக்தன் இசையில் மயங்கி ஆடிய நீ இசக்கி என்ற பெயரோடு பூலோகத்தில் பிறப்பாய், கொடூர குணம் கொள்வாய் என்று சபித்து உன்னை பூலோகம் அனுப்பி வைத்தேன்.
அதனால் இனிமேல் நீ இசக்கியாக உன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பாய்,’’ என்று கூறியருளினார்.
ஒருநாள் கானகத்தில் பலி பூஜை செய்வதற்காக மாட்டுவண்டியில் வந்தான் மந்திரவாதி புலையன். அதைப் பார்த்த நீலி அவன்முன் நிறைமாத கர்ப்பிணியாக மாறி நின்றாள். அவளைப் பார்த்த புலையன், ‘‘யார் நீ? நோக்கு என்ன வேணும்?’’ என்று கேட்க, ‘‘ஞான் நீலியாக்கும். திருவாலாங்காட்டு பழையனூர் நீலி. என்னை பூஜித்தால் நீ வேண்டியதை ஞான் அருளும். நேக்கு மந்திரம் பெருசில்லா, உயிர்பலிதன்னே பெருசு,’’ என்றுரைத்தாள்.
அதன்படி புலையன் நீலிக்கு பீடம் அமைத்து கருங்கிடாவையும், சேவலையும் பலியிட்டு வணங்கினான். அதுமுதல் புனலூர் மந்திரவாதிகள், இவளை இயக்கி என்று போற்றி, தங்களது குலதெய்வமாக வணங்கிவந்தனர். ஒருமுறை வேட்டைக்குச் சென்ற சேரமன்னன், அர்த்தசாமத்தில் புனலூர் வழியாகக் கோட்டைக்குத் திரும்ப, அவனை பின்தொடர்ந்தாள் இயக்கி. மறுநாள் மன்னனும், அவன் குடும்பத்தினரும் நோய்வாய்ப்பட்டனர்.
மருத்துவர்கள் முயற்சித்தும் குணமாகவில்லை. நம்பூதிரிகளை அழைத்து சோழி போட்டு பார்த்தான் மன்னன். ‘வந்திருப்பது ஆங்கார ரூபிணி இயக்கி. மந்திரவாதிகளை வைத்து பலி, பூஜை கொடுத்து, சாந்தப்படுத்தி, காட்டில் கொண்டு நிலை நிறுத்துங்கள்’ என்றனர், நம்பூதிரிகள். அதன்படி வந்த மந்திரவாதிகளில் ஒருவனான புலையன், ‘மன்னா, போர்த் தெய்வமான கொற்றவை, படைவீட்டு அம்மன், காளி போன்றதுதான் என் குலதெய்வமான இயக்கியும். அவளை நினைத்து பெயர்கூறி அழைத்தால் பதில் வரும்,’ என்றுரைத்தான்.
உடனே அரண்மனையின் வடக்கு வாசலில் மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இயக்கி அம்மனுக்கு சிலை வடிவமைத்து படையல் பூஜை நடத்தினார். அன்றிரவு மன்னன் கனவில் தோன்றிய இயக்கி அம்மன், ‘மன்னனே என்னை குளிர வைத்தாய்.
என் ஆங்காரம் தணிந்தது. உனக்கு என் அருள் எப்போதும் உண்டு. நீ வெளியே எங்கு சென்றாலும் மூன்றுமுறை என் நாமம் சொல், உனக்கு நான் துணையாய் வருவேன். ஆலயம், பெத்த வீடு, செத்தவீடு இம்மூன்றையும் தவிர்த்து வேறெங்கும் உன்னோடு நான் வருவேன்,’ என்றாள் இயக்கி. அன்றிலிருந்து மன்னனின் வழிபாட்டு தெய்வமானாள் இயக்கி. இந்த பெயரே நாளடைவில் இசக்கி என்று அழைக்கப்படலாயிற்று. சேரர்களின் ஆட்சிப்பகுதி இன்றைய கேரளம், சேலம், கோயம்புத்தூர் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இவர்களின் தலை நகரம் வஞ்சியாகும்.
சேர நாட்டைச் சேர்ந்த சங்ககால பெண்பால் புலவர் ஔவையார். சேரர், சோழர், பாண்டியர்களிடையே ஒற்றுமை குன்றி, இவர்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை கைப்பற்றும் பொருட்டு வேற்றரசர்கள் படையெடுக்க திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த ஔவையார், மூவேந்தர்களிடத்திலும் தகவலை கூறினார்.
மூன்று பேர் ஒற்றுமையாக இருந்தால் எதிரிகள் படையெடுத்து வர அஞ்சுவர் என்பதைக் கூறி, மூவேந்தர்களையும் ஓரிடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த இடம் பொதுவான இடமாக இருக்க வேண்டும் என்று மூன்று மன்னர்களும் சொல்ல, ஆய் மன்னர் ஆண்டு வந்த வேணாட்டில் ஒரு கானகத்தை தேர்வு செய்த ஔவையார், அங்கே தனக்கென்று ஒரு குடில் அமைத்து, அங்கேயே தங்கியிருந்து சேர மன்னன், ஆய் சிற்றரசன் ஆகியோரின் ஆதரவுடன் அரண்மனை பணியாட்களால் அங்கே மூன்று மன்னர்கள் சந்திக்கும் பொருட்டு மூன்று பந்தல்கள் அமைக்கப்பட்டது. அதுதான் தற்போதைய முப்பந்தல்.
மூன்று மன்னர்களுக்கும் ஓலை அனுப்பப்பட்டது. அருகேயிருந்த சேர மன்னன் முதலாவதாக வந்து சேர்ந்து விட்டான். அவர் வரும்போது, தனது போர்க்கள வழிபாட்டு தெய்வமான இசக்கிஅம்மன் சிலையை கொண்டு வந்து, தனது பந்தலில் வடக்கு நோக்கி வைத்தான்.
அடுத்ததாக வந்த பாண்டிய மன்னன் தனது தெய்வமான மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் சிலை வடிவங்களை கொண்டு வந்தான்.
சேர மன்னன் தனது தெய்வம் உக்கிர சக்தி கொண்டது என்று கூறியதும், முப்பந்தல் பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள தற்போதைய ஆரல்வாய்மொழியில் வைத்தார்.
அதன் பின்புவந்த சோழ மன்னன் தனது போர்க்கள தெய்வமான மாரியை அதே ஆரல்வாய்மொழியில் தற்போதுள்ள பஸ்நிறுத்தம் முன்பு வைத்தார். மூவேந்தர்களிடையே பேச்சு வார்த்தை முடிந்த மன்னர்கள் புறப்படலாயினர். அப்போது சேர மன்னன் தான் கொண்டு வந்த சிலையை எடுக்க முற்பட்டபோது, இசக்கி அம்மன்.
எனக்கு இந்த இடம் பிடித்து விட்டது. நான் இங்கே இருக்கிறேன். நீ செல். தைரியமாகப் போ, உன் துணையாக நான் வருவேன் என்று அசரீரியாகக் கூறியது. அதன் பின்னர் மூவேந்தர்களும் தங்கள் வழிபாட்டு தெய்வங்களை விட்டுச் சென்றனர்.
அன்று தனது குடிலில் தங்கிய ஔவை, மறுநாள் இசக்கிக்கு பூஜை நடந்து முடிந்த நேரம் அவ்விடம் வந்தாள். நான் அனுதினமும் வழிபடும் அந்த சதா சிவனின் இடப்பாகம் அமர்ந்திருக்கும் உமையாளா நீ, நம்ப முடியவில்லை, கண்களை மிரட்டி, நாக்கை நீட்டி, கோரப் பற்களை காட்டி நிற்கின்றாய்.
ஏன் இந்த உக்கிர தோற்றம், மங்களகரமாக காட்சி தரக்கூடாதா என்று கேட்டதும். சிலையிலிருந்து ஒரு ஒளித்தோற்றம் அவ்வையே, இவ்விடம் உற்று நோக்கு என்று குரல் கேட்க, பார்த்தாள் ஔவை, அப்போது செம்பட்டு அணிந்து, செந்தூர திலகமிட்டு, இடுப்பில் ஒட்டியானம், நெத்திச்சுட்டி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பொன்னிற மேனியாக, புன்னகை சிந்தும் முகமும், பின்னி முடித்த நீள கூந்தலும் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி அளித்தாள் இசக்கியம்மன்.
முகம் மலர்ந்த ஔவை ‘‘தேவி, என்றென்றும் சாந்த ரூபிணியாக, இப்படி கல்யாண சுந்தரியாக இருக்க வேண்டும்’’ என்று கூறினாள். அப்போது பேசிய இசக்கியம்மன், ‘‘ஔவையே, நான் எப்போதும் அவ்வாறு இருந்தால் உன்னைப் போன்றோரை காப்பது யார்?, அநீதி தலை தூக்கும்போது நான் ஆங்கார ரூபிணியாகவும், மற்ற நேரங்களில் சாந்தினியாகவும் இருப்பேன்.’’ ‘‘அதை எப்படி நான் பார்க்க முடியும்’’ என்று ஔவை கேட்க, ‘‘ஏன், இவ்விடமே இருந்து பார். நீ சைவத்தை மட்டுமே விரும்புவதால் உனக்கு முன் பூஜை, எனக்கு பின் பூஜை’’ என்றுரைத்த இசக்கியம்மன், அவ்விடம் விட்டு மறைந்தாள்.
காலங்கள் பல உருண்டோட கோயிலை யாரும் கண்டு கொள்ளாமல் போனார்கள். பாழடைந்த நிலையில் கோயில் இருந்தபோது, அந்தக் காலத்தில் புல் அறுக்க வந்த இடைக்குல பெண் ஒருத்தியின் முதுகில் யாரோ ஒருவர் அடித்ததுபோல் இருக்க, அன்றிலிருந்து நோய்வாய்பட்ட அந்தப் பெண்ணை குணப்படுத்த வைத்தியர்கள்
முயன்றும் முடியாமல் போக, குறத்தியை அழைத்து குறி கேட்டனர்.
அப்போது அவள் முப்பந்தலில் உள்ள இசக்கி அம்மனுக்கு சேவல் பலியிட்டு பொங்கல் வைத்தால் குணமாகும் என்று கூற, அதன்படி அவர்கள் பூஜித்ததால் அந்தப் பெண் குணமடைந்தாள்.
இந்தத் தகவல் அக்கம் பக்கம் பரவ, நாளடைவில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க, அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் அம்மனுக்கு ஓடு வேயப்பட்ட சிறிய கோயிலை கட்டினான். ஆரல்வாய்மொழி வடக்கூரிலுள்ள வெள்ளாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அப்போது தெற்கூரைச் சேர்ந்த நாடார்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. உடனே, அவர்கள் கோயிலில் மூலவரை ஸ்தாபித்து அருகிலேயே மேற்குப் பக்கம் புதிதாக கோயில் எழுப்பினர்.
அது மேலக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. முப்பந்தலில் இருந்து பிடிமண் மூலம் இசக்கியம்மன் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் கோயில் கொண்டுள்ளார்.
கோயிலில் மூலவர் இசக்கியம்மன் நின்ற கோலத்தில் அருள்கிறாள். அதன் முன்பு வெள்ளியாலான அமர்ந்த கோல ரூபம் வைக்கப்பட்டுள்ளது. அருகே நின்ற கோலத்தில் கல்யாண சுந்தரி அம்மன் உள்ளார். உட்பிராகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர், முன்னதாக ஔவையார், வைஷ்ணவி, பாலமுருகன் தெய்வங்கள் உள்ளன. வெளியே சுடலைமாடன் கிழக்கு நோக்கியும், பட்டவராயன் மேற்கு நோக்கியும் உள்ளனர். ஔவையாரம்மனின் தனிக்கோயில் கிழக்கு பக்கம் உள்ளது…