வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதில் என்னுடைய 40 ஆண்டு கால கனவு நிறைவேறியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது.
இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையை ஆனந்தக் கண்ணீரில் நனைந்து கொண்டு தான் எழுதுகிறேன். மருத்துவர் அன்புமணி ராமதாசும் கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் இடப்பங்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட போது, ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார்.
அவரது அழுகையை நிறுத்தவைக்க என்னாலும் முடியவில்லை. சரிப்பா…. சரிப்பா என்று தேற்றினேன். எங்களின் ஆனந்தக் கண்ணீருக்குக் காரணம்… மிக மிக மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பது தான்.
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும். நடப்பாண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
6000 மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதன்மூலம் வன்னியர்களின் சமூக நிலையும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்காகத் தான் 40 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன்.
வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமது கோரிக்கையாகும்.
இது குறித்து தமிழக அரசிடமும் வலியுறுத்தி உள்ளோம். அரசும் அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறது.
சட்டப்பேரவையிலும் இந்த உத்தரவாதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாட்டாளி மக்கள் கட்சி வென்றெடுக்கும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவும், அடுத்த 6 மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்குவதற்கு உறுதி அளித்ததற்காகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன்.
வன்னியர்கள் இடப்பங்கீட்டுக்கு துணை நின்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், இதற்காக பல்வேறு வழிகளில் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டு, சட்டப்பேரவையில் இன்று இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்படுவதை சாத்தியமாக்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கும் வன்னியர் சங்கம், பா.ம.க மற்றும் இரண்டரை கோடி வன்னியர்களின் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்