இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ தொடரில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் (மார்ச் 12, 14, 16, 18, 20) கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கான போட்டிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளன.
இத்தொடரில் பங்கேற்கும் 19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு ள்ளது. இதில் தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜன் இடம் பிடித்துள்ளார்.
எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் (மும்பை), ‘ஆல்-ரவுண்டர்’ ராகுல் டிவாட்டியா (ராஜஸ்தான்), விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் (மும்பை) புதுமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகி, பின் காயத்தால் விலகிய வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்றுள்ளார். கேப்டனாக விராத் கோஹ்லி, துணை கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கின்றனர்.
காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பினார். இந்த அணியில் மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), யுவேந்திர சகால், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டிவாட்டியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சகார், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.