பிரபல சுதந்திர போராட்ட வீரரும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினருமான காளியண்ணன் இன்று காலமானார்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் காளியண்ணன். குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தில் 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி பிறந்தார். மாணவப்பருவம் முதலே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். விடுதலைக்குப் பின் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுக்க அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றவர் களுள் இவரும் ஒருவர். பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் எளிய மக்களின் வாழ்வுக்காக உழைத்தவர்.
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட பெருமை கொண்ட இவர், மனைவி பெயர் பார்வதி அம்மாள். இந்திய அரசியல் சபை உறுப்பினர்களிலும், நாட்டின் முதல் மக்களவையிலும் இடம் பெற்றவர்களில், உயிரோடு இருந்தவர் காளியண்ணன் மட்டுமே. சமீபத்தில் தனது நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில். இன்று அவர் காலமானார்.
சென்னை பச்சையப்பன் மற்றும் லயோலா கல்லூரிகளில் முறையே இளங்கலை, முதுகலை பயின்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்டமேலவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய காளியண்ணன், தனது அரசியல் வாழ்க்கையில் 1000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை திறந்து வைத்தார்.
அரசின் சார்பில் சேலம் மாவட்ட தலைவராக பணியாற்றிய போது கொல்லிமலை சாலையை சீரமைத்தார். பழைய சேலம் மாவட்டம் பல வகைகளில் முன்னேற அடித்தளம் அமைத்தவர்களில் மிக முக்கியமானவர் காளியண்ணன். பள்ளிப்பாளையம் மேம்பாலம் அமைத்ததில் முக்கிய பங்காற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான காளியண்ணன், காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது, துணைத்தலைவராக இருந்தவர். மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, காமராஜர் உடன் இணைந்து அரசியல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மறைந்த காளியண்ணனுக்கு ராஜேஸ்வரன், கிரிராஜ் குமார் என்ற மகன்களும் சாந்தா, வசந்தா, விஜயா ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் கிரிராஜ்குமார் மறைந்துவிட்டார்.
காளியண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.