முகப்பு செய்திகள் மாணிக்க வாசகர்: குரு உபதேசம்!

மாணிக்க வாசகர்: குரு உபதேசம்!

அவ்வேளையில், சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது, அவர் செவிகளுக்கு எட்டியது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில், கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில், சீடர்கள் சிலரோடு, சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார்.

வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும், கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள், அந்தக் குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பற்றறுக்கும் ஆசானாக, அந்தக் குருநாதர் வீற்றிருந்தார்.

அவரது வலத்திருக்கை, சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம், ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள், திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறு வீற்றிருந்த, குருநாதரைக் கண்ட வாதவூரார், தாம் பலநாள்களாக விரும்பியிருந்த குருநாதர், இவரே யென்று எண்ணினார்.

காந்தம் கண்ட இரும்பு போல, மணிவாசகர் மனம், குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில், விரைந்து அருகிற் சென்ற வாதவூரார், அடியற்ற மரம் போல, அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்து, அய்யனே! எளியேனை ஆட்கொண்டருளுக, என வேண்டி நின்றார்.

வாதவூரரின், பரிபாக நிலையைக் கண்ட குருநாதர், திருக்கண் நோக்கம், ஸ்பரிசம் முதலிய தீட்சைகள் செய்து, திருவடிசூட்டி திருவைந்தெழுத்தை, அவருக்கு உபதேசம் செய்தருளினார். இவ்வாறு, தம்மை ஆட்கொண்டருளிய, பெருங்கருணைத் திறத்தை, வியந்து வாதவூரார்,

ஞானாசிரியரது திருவருள் நோக்கால், ஞானத்தின் திருவுருவாகவே வாதவூரார் மாறினார். தமது குருநாதரின் திருவடிகளுக்கு, தம்மை ஆட்கொண்ட கருணையை குறித்து, சொல்மாலைகள் பலவும் சூட்டினார்.

பெயர் சூட்டல்:

ஞானாசிரியர் திருமுன், வாதவூரார் பாடிய தோத்திரங்கள், இனிமையோடும், கேட்போர் மனத்தையுருக்கும், அருள் விளக்கத் தோடும் இருந்த காரணத்தால், ஞானாசிரியர், வாதவூரரை நோக்கி, உனக்கு, மாணிக்கவாசகன்` என்ற பெயர் தந்தோம் என்று கூறி, அவருக்கு அப்பெயரை தீட்சா நாமமாகச் சூட்டினார்.

அன்று முதல், வாதவூரார் என்ற திருப்பெயருடன், மாணிக்க வாசகர் என்ற பெயரும்; அவருக்கு வழங்குவதாயிற்று.

திருப்பெருந்துறைத் திருப்பணி:

மணிவாசகர்; குருநாதரை வணங்கி, என்னை ஆட்கொண்ட போதே, என்னுயிரும் உடைமையும்; தங்கட்குரியவாயின. ஆதலால், அடியேன் கொண்டு வந்த, பொருள்கள் அனைத்தையும் தாங்கள், ஏற்றுக் கொண்டு அருளல் வேண்டும் என்று குறையிரந்தார். குருநாதரும், அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க என்று அருளாணை யிட்டார். அக்கட்டளையின்படியே, மணிவாசகர்; அப்பொருள்களைக் கொண்டு,

திருப்பெருந்துறையில், மிகச் சிறந்த திருக்கோயிலைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் முதலியன அமைத்தார். அடியார்களுக்கு, மாகேசுவரபூசை நிகழ்த் தினார்.

இவ்வாறு, அரசன் குதிரை வாங்குவதற்கு, தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும், சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன. மணிவாசகர், அருளாரமுதத்தை உண்டு கொண்டே, தெருளார் சிவானந்த போகத்துத் திளைத்திருந்தார். அமைச்சரின் வேறுபட்ட நிலையை, உடன் வந்தவர்கள் கண்டு மணிவாசகரிடம், குதிரை கொண்டு மதுரை செல்லவேண்டுமே,

என்று, தாங்கள் எண்ணிவந்த செயலை நினைவூட்டினர். மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய், இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்த பணியாளர்கள், மதுரை மாநகருக்குச் சென்று, பாண்டியனிடம் நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தனர்.

பாண்டியன் அழைப்பு:

இச் செய்தியையறிந்த பாண்டியன், சினந்து திருமுகம் ஒன்று எழுதி, அதனை வாதவூரரிடம் சேர்ப்பித்து, அவரை அழைத்து வருமாறு ஆணையிட்டு, சிலரை ஏவினான். பணியாளர்களும், திருப்பெருந் துறையை அடைந்து, அரசன் அளித்த திருமுகத்தை, அமைச்சர் பிரானிடம் கொடுத்து, அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர்.

அதனைக் கேட்ட வாதவூரார், தம் குருநாதரிடம் சென்று, நிகழ்ந்ததை விண்ணப் பித்து நின்றார். குருநாதர் புன்முருவல் பூத்து, அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும், என்று மன்னனிடம் அறிவித்து, விலை யுயர்ந்த மாணிக்கக்கல்லையும், கையுறையாகக் கொடுக்க எனக் கூறி, மாணிக்க மணியை அளித்து, விடை கொடுத்தனுப்பினார்.

வாதவூரரும், குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய், பிரியா விடைபெற்று ,மதுரைக்கு எழுந்தருளினார். அரசவைக்கு வந்த மணிவாசகர், இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து,

வருகின்ற ஆவணிமூல நாளில், குதிரைகள் மதுரை வந்தடையும் என்று கூறினார். அரசனும், சினம் மாறி மனம் மகிழ்ந்து, அமைச்சரை அன்போடு வரவேற்று, அருகிருந்து அவரை மகிழ்வித்தான்.

ணிவாசகரை மன்னன் ஒறுத்தல்:

ஆவணி மூலநாளை; அரிமர்த்தனன்; ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர்; அமைச்சருள் சிலர், `வாதவூரார் சொல்லியன அனைத்தும் பொய்யுரை; அவர், தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும், திருப்பெருந்துறையில் அரன் பணிக்காகச் செலவிட்டு விட்டார்,

அவர் கூறுவதை நம்ப வேண்டா“ என்று கூறினர். பாண்டியன் ஒற்றர்களை விடுத்து, அவர்கள் மூலம்; அமைச்சர்கள் கூறியன அனைத்தும், உண்மையென்பதை அறிந்தான். வாதவூரார் செய்கையை எண்ணிச் சினந்து, தண்டநாயகர் சிலரை அழைத்து, வாதவூரார் பால் சென்று, குதிரை வாங்கக்கொண்டுபோன, பொருள்கள் அனைத்தையும், வற்புறுத்தித் திரும்பப் பெற்று வருமாறு கட்டளை யிட்டான். அச் சேனைத் தலைவர்கள், வாதவூரரிடம் சென்று, மன்னன் கட்டளையை எடுத்துக்கூறி, அவரைத் துன்புறுத்தத் தலைப்பட்டனர். கொடுஞ்சிறையில் இட்டனர்.

சுடுவெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினர். வாதவூரார்; இறைவனைத் தியானித்து, ஐயனே! ஆவணி மூலத்தன்று; குதிரை வருவதாகக் கூறிய, உன் உரை பொய்யாகுமோ?. உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது தகுதியா?. என்னைக் கைவிடில்; எனக்கு யார் துணை?. அடியான் ஒருவன் துன்புறுவது; உனக்குக் குறையல்லவா?. என்றெல்லாம் இறைவனிடம் முறையிட்டு வருந்தினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments