துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை ஆணையத்துக்கு கால நீட்டிப்பு வழங்காமல் விசாரணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டு, நவ.11 முதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, துணைவேந்தர் சூரப்பா மீது புகார் தெரிவித்தவர்கள் ஆணையத்துக்கு நேரில் அழைக்கப்பட்டு விசாரிணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உரிய காலத்துக்குள் விசாரணையை முடிக்க முடியாது என அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்க நீதிபதி கலையரசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் அருள் அறம், செயலாளர் எஸ்.சந்திரமோகன் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
துணைவேந்தர் சூரப்பா மீது எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி எழுதப்பட்ட அனாமதேயக் கடிதங்களில் கண்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு உத்தரவிட்டது.
குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் தொடர் விசாரணைகளை நடத்தியும், சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் எவ்வித முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. கரோனா முழு அடைப்புகளுக்குப் பிந்தைய கல்விப் பணியில் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்களின் முழு கவனமும் இந்த விசாரணை பக்கமே திசை திருப்பப்பட்டு, தொய்வு நிலையிலேயே உள்ளது.
விசாரணைக்குத் தொடர்பு இல்லாத விவரங்களைக் கேட்டு, ஆசிரியர்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது. இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பது கல்வியாளர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்வதோடு, பல்கலைக்கழகத்தின் மாண்பை நாமே சிதைப்பது போலாகும்.
இதை மனதில் கொண்டு, கலையரசன் ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு எதையும் வழங்காமல், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீதான விசாரணையைத் திரும்பப் பெற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.