கொரோனா அச்சம் காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடி அருகே திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் டில்லி, 74. அவரது மனைவி மல்லிகேஸ்வரி, அவர்களது மகள் நாகேஸ்வரி ஆகியோர் வீட்டில் உள்ள மின் விசிறியில் உள்ள கொக்கியில் தனித்தனியாக புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மல்லிகேஸ்வரியின் சகோதரர் வெங்கட்ராமனின் ஆதரவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக 3 பேருக்கும் காய்ச்சல் இருந்ததாகவும், அருகே உள்ள மருந்துக் கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்ததாகவும் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் அதிகமானதால் மூவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் வெங்கட்ராமன் புகார் அளித்திருந்தார். 3 பேரின் சடலத்தை மீட்டுள்ள திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.