தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கியில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
பொள்ளாச்சியில் நடந்த உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,
நீண்ட கால பிரச்னைகளுக்கு என்னால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளீர்கள்; நம்பிக்கை தான் எனக்கு சொத்து; நான் உயிரோடு இருக்கும் வரை அதை காப்பாற்றுவேன்.
அ.தி.மு.க.,வுக்கும், பாலியலுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்தனர். தற்போது, சி.பி.ஐ., அ.தி.மு.க.,வை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளது.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை காப்பாற்றத்தான் இந்த அரசு நாடகமாடுகிறது. பெண்களை பாதுகாக்கிற அரசு என விளம்பரம் மட்டும் கொடுத்தால் போதாது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆளுங்கட்சிக்கு தொடர்பு உள்ளது. ஆண்மை, தெம்பு, துணிவு இருந்தால் என் மீது வழக்கு தொடரலாம்; நான் சந்திக்க தயராக உள்ளேன்.
பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் இந்த ஆட்சியில் இல்லை. சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த அறிவிப்பை கேட்டால், முதல்வர் பழனிசாமி நாளையே கடன்களை தள்ளுபடி செய்தாலும் செய்வார். நான் சொல்வதை தான் அவர் செய்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.