பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் ஐ.பி.எல். லீக் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களான கேய்க்வாட் மற்றும் டூ பிளசிஸ் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். இதனால் பேட்டிங் பவர் பிளே முடிவில் சென்னை அணியின் ஸ்கோர் 50ஐ தாண்டியது. இந்நிலையில் ஓபனிங் பேட்ஸ்மேன் கேய்க்வாட் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மேலும் டூ பிளசிஸ் 50 ரன்களில் ஆட்டமிழக்க வேகமாக ஏறிய சென்னை அணியின் ஸ்கோர் ஒரு கட்டத்தில் ஆமை போல் நகர ஆரம்பித்தது.
தொடக்க வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 150 ரன்களாவது எடுக்குமா என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கேப்டன் தோனியும், ஜடேஜாவும் களத்தில் நிற்க 19 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீச ஹர்ஷல் பட்டேல் வந்தார். ஏற்கெனவே டூ பிளசிஸ், ரெய்னா, ராயுடு ஆகிய மூன்று விக்கெட்களை வீழ்த்திய பெருமையில் 20வது ஓவரின் முதல் பந்தை வீசினார்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த பந்தை எல்லை கோட்டிற்கு வெளியே அனுப்பினார் ஜடேஜா. அதே வேகத்தில் அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார் ஜடேஜா. இதனால் நிலைகுலைந்துபோன ஹர்ஷல் பட்டேல் அடுத்த பந்தை நோபாலாக வீசினார்.
இந்நிலையில் அந்த ஓவரின் இறுதியில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு 2 மற்றும் ஒரு நோபால் என 37 ரன்களை விளாசியிருந்தார் ஜடேஜா. இதனால் 28 பந்துகளுக்கு 63 ரன்களை குவித்தார் ரவீந்திர ஜடேஜா. சென்னை அணியின் ஸ்கோரும் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் களமிறங்கிய பெங்களுரு அணி துவக்கம் முதலே தனது விக்கெட்களை பறிகொடுக்க தொடங்கியது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் கோலி 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க தேவ்தத் படிக்கல் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பெங்களூரு அணி 122 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தோல்வியுற்றது.
சென்னை அணியின் சார்பில் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்களையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்களையும், காம் கர்ரன் மற்றும் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.