குடிபோதையில் பேக்கரி பெயர் பலகையை கல்வீசி உடைத்து மிரட்டல் விடுத்த அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சியினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பழங்கரை பகுதியில் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த அஜ்மல் என்பவர் மேலாளராக பணி செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை இக்கடைக்கு காரில் வந்த மூன்றுபேர் குடிபோதையில் மேலாளர் அஜ்மல் உள்ளிட்ட கடை ஊழியர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி சண்டைபோட்டதோடு மட்டுமல்லாமல், பெயர் பலகையை தமிழில் வைக்கச் சொல்லி ஆங்கிலத்தில் இருந்த பெயர் பலகையை கல்லால் அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் பேக்கரி மேலாளர் அஜ்மல் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நாம் தமிழர் கட்சி அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், அக்கட்சியின் அவிநாசி (தனி) தொகுதி வேட்பாளருமான ஷோபாவின் கணவர் கோபாலகிருஷ்ணன்(46), அவிநாசி தொகுதி பொறுப்பாளர் முத்துகுமார் (29) மற்றும் அவிநாசி தொகுதி துணைச்செயலாளர் தேவராஜ் (46) ஆகிய மூவரும் பேக்கரி பெயர் பலகையை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் அவிநாசி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.