நடிகரும், சமத்துவமக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் ௨௦௧௧ம் ஆண்டு தேர்தலில், அதிமுக கூட்டணியில், தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.
பின்னர் 2016ம் ஆண்டு தேர்தலில், திருச்செந்துார் தொகுதியில், அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார். அதில், 62,356 வாக்குகளை மட்டும் பெற்ற சரத்குமார், அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.
தற்போது நாடார்கள் அதிகம் வசிக்கும், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளார்.
இதற்காக தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆலங்குளம் தொகுதியில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் வேலைகளை செய்து வருகிறார்.
பூங்கோதை ஆலடி அருணா
இவரை எதிர்த்து திமுக சார்பில், எம்.எல்.ஏவாக இருக்கும் பூங்கோதை களமிறங்குகிறார். ஏனென்றால் தொகுதியில் செய்த நலத்திடங்கள் மற்றும் கொரோனா காலத்தில் மக்களுக்கு செய்துள்ள உதவிகளுக்காக மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஹரி நாடார் ஆலங்குளம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதற்காக ஆலங்குளத்தில் இப்போதே பிரசாரத்தையும் அவர் தொடங்கிவிட்டார். ஆலங்குளம் தொகுதிக்குள்ள அண்ணன் வந்தாலே, அவர் நகையைப் பார்க்கத்தான் பெண்கள் திரண்டு வர்றாங்க. நடமாடும் நகைக்கடையா அண்ணன் ஃபேமஸ் ஆகிட்டார் என்று அவரது கட்சியினர் பேசுவதை கேட்கலாம்.
அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுவதற்கு முயன்று வருகிறார்.
ஏனெனில், தனது தந்தை சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது, ஆலங்குளம் தொகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்கள், தற்போது ஆலங்குளம் தொகுதியில் உள்ளது. இதனால் இங்கு போட்டியிட்டால் தனது வெற்றி சுலபம் என நினைத்து களமிறங்குகிறார்.
எப்படியோ வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடே வியக்கும் தொகுதியாக ஆலங்குளம் தொகுதி இருக்கும் என்பதில் ஐயமில்லை.