பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே 4,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியிலிருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
மேலும், மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கழக நிறுவனத்தில் பெட்ரோல் கந்தகம் அகற்றும் பிரிவை தொடங்கிவைத்த பிரதமர், நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் காவிரிப் படுகை சுத்திகரிப்பு ஆலை அமைக்க அடிக்கல் நாட்டிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
பெட்ரோலிய இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக நரேந்திர மோடி தெரிவித்தார்.
உஜ்வாலா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 32 லட்சம் குடும்பத்தினருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
இயற்கை எரிவாயுக் குழாய் திட்டம் மூலம், மக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எரிவாயு கிடைக்கும் என்று நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.