தேர்தல் பொதுக் கூட்டங்களால்தான் கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்ததாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 6,618 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் உள்பட தமிழகம் முழுவதும் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவுபெற்றது.
இந்த நிலையில் தேர்தல் பொதுக் கூட்டங்களால்தான் கொரோனா பரவல் அதிகரித்ததாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறினார். இது குறித்து நிருபர்களிடம் பேசியதாவது,
கொரோனா ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கியது. தேர்தலுக்காக நடத்திய கூட்டங்களின் காரணமாக தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
தமிழகம் மறுபடியும் முழு ஊரடங்கை சந்திக்க தயாராக இல்லை எனவும், இதற்கு பதில் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும், இலவச முகக்கவசம் வழங்கவேண்டும் என வலியுறுத்திய அவர், கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் தமிழக அரசு தேர்தலை நடத்த ஏன் ஒப்புக்கொண்டது எனக் கேள்வி எழுப்பினார்.
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும், தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் அனைத்து குடும்பத்திற்கும் தலா 15 ஆயிரம் தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.