உலகில் 10-ல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறது என்று அபுதாபியில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையத்தின் மூலம் காணொலி காட்சி வழியாக மருத்துவ கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் பேசிய அபுதாபி சுகாதார சேவைத்துறை சிறுநீரக மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியதாவது:
உலகில் 10 பேரில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வருகிறது. மேலும் 10 நோயாளிகளில் 9 பேர் தங்களுக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதையே தெரியாமல் இருக்கின்றனர்.
இதனால் தற்போது சிறுநீரக பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலக்கட்டத்திலும் எல்லைகளை தாண்டி இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.