தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்தது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற்று வருகின்றன. அசாமில் நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலுடன் அங்கு தேர்தல் பணிகள் முடிவுக்கு வந்தது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர்.
தமிழகம் முழுவதும் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கொளுத்தும் வெயிலிலும் உற்சாகமாக வாக்களிக்க வந்தனர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடி அருகே அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரி, அசாம், மேற்குவங்காளம் மற்றும் கேரள மாநிலஙகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. இதில் மேற்குவங்காளத்தில் தேர்தல் முடிவடையாததால், 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே)2-ந்தேதி தான் நடைபெறும்.
தமிழகத்திலும் அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனவே தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதை அறிய தேர்தல் முடிவுக்காக 24 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் ஆட்சியை பிடிப்பது யார் என பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.