தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மதுபான விற்பனை, விநியோகம், முறைப்படுத்துதல் தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஆன்லைனில் மதுபான விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் வரை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என குறிப்பிட்டு, வழக்கை 3 வார காலத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.