கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடை அருகேயுள்ள தேக்கம்பட்டியில் வசிக்கும் 105 வயதான பாப்பம்மாள் பாட்டிக்கு ௨௦௨௧ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இது கோவை மாவட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாப்பம்மாள் பாட்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாதர் சங்கத் தலைவி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விவாதக்குழு உறுப்பினர் எனப் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
இனி பாட்டியின் வரலாற்றை பார்ப்போம்…
பாப்பம்மாள் பாட்டிக்கு, தேவனாபுரம் கிராமம்தான் பூர்வீகம். 1915ம் ஆண்டு பிறந்த பாப்பம்மாள், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவிட, இவரது பாட்டி தான், இவரையும், இரு சகோதரிகளையும் தேக்கம்பட்டி கிராமத்துக்கு அழைத்து வந்து அங்கு மளிகை கடை வைத்து வாழ்க்கையை துவங்கியுள்ளார்.
இந்நிலையில் பாட்டியும் இறந்துவிட மளிகைக் கடையை பாப்பம்மாள் எடுத்து நடத்தி வந்துள்ளார். பாப்பம்மாளுக்கு குழந்தை இல்லை. அவரது கணவர் ராமசாமி, 1992ஆம் ஆண்டு மறைந்த பின், தனி ஒரு மனுஷியாக விவசாயத்தில் உயர்ந்து காட்டியிருக்கிறார். ’
தேக்கம்பட்டியில் மளிகைக்கடை, உணவகம் என ஆரம்பக்கால தொழில்களில் கிடைத்த வருமானத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கிய பாப்பம்மாள், கோவை மாவட்டத்தின் பெருமைமிகு விவசாயி. எத்தனையோ இயற்கைப் பேரழிவுகள், இந்தியச் சுதந்திரம், உலகப் போர்கள் எனப் பல வரலாற்றுச் சம்பவங்களை தன் வாழ்நாளில் பார்த்தவர்.
தேக்கம்பட்டி கிராமத்தில் கொள்ளுப்பேரன் – பேத்திகளுடன் வாழ்ந்து வரும் பாப்பம்மாள் வருகிறார்.
எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சதுக்கு, கோயம்புத்தூர் ஜில்லாவே பாராட்டுது. எனக்கு அப்பா, அம்மா எல்லாம் என் சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க.
அப்பத்தா இருந்தா. கொஞ்ச நாள் நானும் அப்பத்தாளும் இருந்தோம். எங்கள் ஊருக்கு அழைச்சிட்டு வந்த கவுண்டர்கிட்ட, எங்க காலத்துக்குப் பிறகும் குழந்தைங்கள பார்த்துக்குங்க என்று எங்க அப்பாரு சொன்னாரு. பெத்த அப்பன் மாதிரி எல்லாம் எங்கள் பார்த்துக்கிட்டாரு.
எனக்கு அக்கா புள்ளைங்க. தங்கச்சி புள்ளைங்க. அவங்களோடதான் இருக்கேன். தேவனாபுரம் பாட்டன் – பூட்டன் இருந்த ஊரு. அந்தக் காலத்துல ஊர்ல இருந்த செட்டியாருங்க ஊட்டியில் போய் கடை வைச்சுட்டாங்க.
தேக்கப்பட்டியில இருந்த கவுண்டரு எங்கப்பாவை அந்தக் கிராமத்துக்கு அழைச்சிருக்காரு. வீடு வாசல் இல்லாம என்னா பண்றதுன்னு எங்க அப்பா கேட்டிருக்காரு. நீங்க கவலைப்படாம வாங்க.
நான் இடம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. இந்த ஊருக்கு வந்து 105 வருசமாகுது” என்று உற்சாகமாக நினைவுகளைப் பேசும் பாப்பம்மாள், விவசாயத்தைப் போலவே அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
விவசாயம் என்றதுமே அவரிடம் இருந்து சரளமாக வருகிறது பதில். விவசாயம் ஐம்பது வருசமா செஞ்சுக்கிட்டிருக்கேன். மானாவாரியா பாசிப்பயிறு, தட்டப்பயிறு, உளுந்து, கொள்ளு, அவரை, துவரை, சோளம், மக்காச்சோளம் எல்லாம் போடுவேன்.
நான் விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கும்போது, வேளாண் கல்லூரியிலிருந்து அதிகாரிகள் வருவார்கள். தேக்கம்பட்டியில் இந்த அம்மா நல்லா விவசாயம் செய்றாங்கன்னும் எல்லோரும் சொன்னதாக எனக்கு ஊக்கம் கொடுப்பாங்க.
இந்தப் பக்கம் எனக்குத் தெரியாத இடமே இல்லை. முன்னாடி பத்து ஏக்கர் வைச்சிருந்தேன். விவசாயம் செய்ய முடியாம வித்துப்போட்டேன். இப்ப இரண்டரை ஏக்கர்ல விவசாயம் செய்றேன். என் அனுபவத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் 13 துணை வேந்தர்களைப் பார்த்திருக்கிறேன்.
எனக்கு ௧௦௫ வயதானாலும் இன்றும் என்னுடைய வேலைகளை நானே செய்து வருகிறேன். வயதாகி விட்டதால் அளவான உணவு சாப்பிட்டு வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறினார்.
எங்கள் காலத்தில் அனைத்து வேலைகளையும் தாங்களே செய்ததால் தங்கள் உடம்பில் நோய்கள் வந்ததில்லை என்றும், அதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லை எனவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் என்னைத்தான் பெரிய அதிகாரி மாதிரி நினைப்பார்கள். வேளாண்மை விவாதக் குழுவில் இன்னும் இடம் பெற்றுள்ளேன் என்று பெருமையாக சொல்லும் பாப்பம்மாள் பாட்டிக்கு ஒரு நிறைவேறாத ஆசை உள்ளது.
அது என்ன என்றால், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்று நீண்டநாள் ஆசைப்பட்டதாக கூறிய பாப்பம்மாள், அந்த ஆசை நிறைவேறாமல் போனதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்