என்னை பாரதிய ஜனதாவால் மிரட்ட முடியாது என்று தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடி வந்த ராகுல் காந்தி கூறினார்.
தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, துாத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரசாரத்தில் பேசுகையில், ஒரு தேசம் என்பது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள், பஞ்சாயத்துகள், பல அரசியல்சாசன அமைப்புகளால் ஆனது.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்புகள் மீது மத்திய அரசு திட்டமிட்ட தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டின் அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தையும் பா.ஜ., சீரழித்து வருகிறது.
நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது என்பதை வேதனையுடன் தெரிவிக்கிறேன். இந்தியா பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இன்று மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
என்மீது எந்த ஊழல் புகாரும் இல்லாததால், சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் என்னை அச்சுறுத்த முடியாது. காங்., ஆட்சி செய்யும் மாநிலங்களில் எம்.எல்ஏ.,க்களை பா.ஜ., விலை கொடுத்து வாங்குகிறது.
அதிகார பலத்தால் கட்சி மாற வைக்கிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் தேர்தலை சந்திக்கிறது. மதச்சார்பின்மையை பா.ஜ., சிதைத்து விட்டது. விவசாயிகள் போராட்டம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை பாஜ அரசு நெறிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மீன்பஜார் அருகே நடந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, டிவியை ரிமோட் மூலம் மாற்றுவது போல், தமிழக அரசை, மோடி இயக்கி வருகிறார். விரைவில், அந்த ரிமோட்டின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்றார்.