சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று தனது முடிவை அறிவித்தார். இதையடுத்து கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் மே 3-ம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் விருது விழாவில் கலந்து கொள்கிறார்.