இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2,96,901 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் 2,38,638 பேர் குணமடைந்துள்ளனர். 4,927 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்க்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுவாமிநாதன் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
அவருக்கு வயது 62. அவரது மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் சுவாமிநாதன், ‘பகவதி’ படத்தில் வடிவேலுவுடன் ஒரு காட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்ட அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நோய்த் தொற்ற்லிருந்து மீண்டு வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.