ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அரசின் சார்பில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும். நடப்பு ஆண்டில், ஆசிரியர் தினத்தன்று மாநில அரசின் நல்லாசிரியர் விருதுகள் பெற தேர்வு செய்யப்பட்ட 375 பேருக்கு, 5ம் தேதிக்குப் பதில் 7ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன.
நடப்பு ஆண்டில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் இருந்து 330 பேர், மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 32 பேர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இருந்து இருவர், சமூக நலத்துறையில் இருந்து ஒருவர், SCERT-ல் இருந்து 10 பேர் என்று மொத்தமாக 375 பேருக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு, வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் 15 ஆசிரியர்களுக்கு மட்டும் முதலமைச்சர் பழனிசாமி விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் கேளையாப்பிள்ளையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வே.சுசிலாள் அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது .