திருநெல்வேலி மாவட்டம்., சீவலப்பேரி அருகே அமையப்பெற்றுள்ள மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா திருக்கோவில் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மூலவர்: பூர்ணா, புஷ்கலா உடனுறை ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா.
பரிவார மூர்த்திகள்:
சங்கிலி பூதத்தார்
தளவாய் மாடன்
தளவாய் மாடத்தி
தளவாய் போத்தி
லாட சன்னியாசி
தவசி தம்புரான்
வீரபத்திரர்
கொம்பு மாட சாமி
மலையழகு அம்மன்
பேச்சி அம்மன்
சுடலை மாடன்
ஆழிபோத்தி
சிவனிணைந்த பெருமாள்
கருப்பசாமி
பட்டவராயன்
சப்பாணி மாடன்
சப்த கன்னியர்
கொம்பு மாடத்தி
திருக்கோவில் வரலாறு:
முற்காலத்தில் திருநெல்வேலி ஜில்லாவுக்கு உட்பட்ட மணியாச்சி ஜமீனை சேர்ந்த ஏழு பேர்கள் வேலை நிமித்தமாக,
சேர நாடு என்று அழைக்கப்படும் கேரளா பிரதேசத்திற்கு சென்றனர்.
அவர்கள் பல நாட்கள் அங்குக் கடினமாக உழைத்துப் பொருள் ஈட்டினார்கள்.
அப்படி ஈட்டிய பொருட்களை எல்லாம் சேகரித்து தங்கள் ஊருக்குத் திரும்பும் பொருட்டு ஒரு மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
அந்தக்காலத்தில் போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது என்பதால் கால் நடை பயணமாகவே ஊர்
விட்டு ஊருக்குச் செல்ல வேண்டும்.
இந்த ஏழு நபர்களும் தாங்கள் சேகரித்து மூட்டைகட்டிய பொருட்களோடு காடுகளின் வழியே நடைபயணம் மேற்கொண்டபோது, இவர்களைத் திருடர்கள் கூட்டமாகத் துரத்தி வந்தார்கள்.
திருடர்களிடமிருந்து தப்பிக்க ஏழு நபர்களும் காடுகளுக்குள் ஓடிச் சென்று பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.
அந்தப் பகுதிக்கு வந்த திருடர்கள் கூட்டம் இவர்களைத் தேடியபோது, காட்டு யானை ஒன்று சத்தமாகப் பிளிறிக்கொண்டே
ஓடி வர, பயந்து போன திருடர்கள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.
இந்தக் களேபரம் நடந்து முடிந்த சில மணி நேரத்திற்கு பின்னர் புதரை விட்டு வெளியே வந்த அந்த ஏழு நபர்களும் வெளியே வர அங்குப் பச்சை மண்ணால் செய்யப்பட்ட சாஸ்தா விக்கிரகம் இருப்பதை கண்டு வணங்குகிறார்கள்.
அப்போது ஒருவன் இந்தச் சாமி தாண்டா நம்மை எல்லாம் திருடர்களிடமிருந்து காப்பாத்திருக்கு எனக் கூற, மற்றோருவன் ஆமாம்டா இவரைப் பார்த்தா சாஸ்தா மாதிரி தெரியுது, இவரோட வாகனம் தான் யானை, அந்த யானையை அனுப்பி நம்மைக் காப்பாத்தினது இந்தச் சாமி தானெனக் கூற அனைவரும் அந்தச் சாஸ்தாவை வணங்கி, நன்றி செலுத்திவிட்டு புறப்படத் தயாராகும்போது, அவர்களில் ஒருவன் நாம் இந்தச் சாமியை
நம்ம ஊருக்கு கொண்டுபோவோம் என்று சொல்லிச் சுமந்து வர, மற்றவர்களும் அதனை ஆமோதித்து ஒருவர் மாத்தி ஒருவர் சுமந்தபடி காடு, மலை, மேடு, பள்ளம், அருவி, ஆறு எனக் கடந்து நாஞ்சில் நாடு வழியாகத் தென்பாண்டி நாட்டிற்குள் நுழைகின்றனர்.
இங்கு வந்தவுடன் அவர்கள் இளைப்பாறும் பொருட்டு அமுதுண்ணாக்குடி என்னும் கிராமத்தில் சுவாமி விக்கிரகத்தை இறக்கி வைத்துவிட்டு தூங்குகிறார்கள்.
பின்னர் தங்கள் பயணத்தைத் தொடரும் பொருட்டு அவர்கள் புறப்படுகையில் அங்குப் படர்ந்து இருந்த சுரைக்காய் கொடி
காலை இடறி விட, சுவாமி விக்கிரகத்தின் கால் பகுதி உடைந்து விழுந்துவிடுகிறது.
பின்னர் அவர்கள்
தங்கள் பயணத்தைத்
தொடர்ந்து வந்து
கொண்டிருக்கையில் பிற்பகல் வேளையில் உணவு அருந்துவதற்காகக் கடம்பாகுளம் என்னும் ஊரில் தங்கள் மூட்டை முடிச்சுகளோடு, சாமி விக்கிரகத்தையும் இறக்கி வைக்கிறார்கள்.
தங்கள் உணவை உட்கொண்டபின்னர் அங்கிருந்து கிளம்ப தயாரான அந்த ஏழு நபர்களும் தங்கள் மூட்டை முடிச்சுகளோடு, சுவாமி விக்கிரகத்தையும் தூக்க முயற்சிக்க, மார்புக்கு கீழ் உள்ள பகுதி அந்த நிலத்திலேயே புதைந்து விடுகிறது.
கையில் கிடைத்த மீதி விக்கிரகத்தைச் சுமந்தபடியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தவர்கள் ஸ்ரீ வல்லப பேரேரி என்னும் ஊர் வழியாக மணியாச்சி நோக்கிச் செல்லும்போது, உடைந்த விக்கிரகத்தை ஊருக்குள் கொண்டு சென்றால் அது நல்லதல்ல என ஒருவன் கூற அதனை அங்கிருந்த சிறு மலையின் உச்சிமீது சென்று வைத்து விட்டுத் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்.
பின்னர் வந்த ஒருநாள் சுவாமி தான் இருக்கும் இடத்தை வெளிக்காட்ட திருவுள்ளம் கொண்டு
ஒரு திருவிளையாடல் புரிந்தார்.
மணியாச்சி ஜாமீன் வீடு பசு மாடு ஒன்று இந்த மலைப்பகுதியில் வந்து சுவாமி இருந்த இடத்தின் மீது தனது பாலை தானாகச் சொரிந்தது.
இதனால் தினமும் அந்தப் பசுவிடமிருந்து ஜமீனுக்கு பால் கிடைக்கவில்லை.
இதனை அறிந்த ஜமீன்தார் யாரோ
தனது பசுமாட்டின்
பாலை திருடுகிறார்கள் என நினைத்துத் தன் வேலையாட்களை மாடுகள் உடன் அனுப்பி வைத்து, மறைந்து இருந்து கவனிக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த வேலையாட்களும் ஜமீன் வீடு பசுவைப் பின் தொடர்ந்து செல்ல, அந்தப் பசு மலைமீது சென்று குறிப்பிட்ட இடத்தில் தானாகத் தனது பாலை சொரிவதை கண்டு வியந்து, ஓடிச் சென்று ஜமீன்தாரிடம் விஷயத்தைக் கூறி அழைத்து வருகிறார்கள்.
ஜமீன்தாரும் அங்கு வந்து இந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்து நிற்க, அங்கு ஊர் மக்களும் கூடி நிற்கிறார்கள்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு அருளாவேசம் வந்து சாமியாடுகிறார்.
அவர் அந்த இடத்தில் நிலை கொண்டிருப்பது சாஸ்தா என்றும், அங்குச் சாஸ்தாவுக்கு ஒரு கோவில் எழுப்பி,
அவரைக் காத்து நிற்க இருபத்தியொரு காவல் தெய்வங்களுக்கும் பூடம் அமைத்துக் கொடுத்து வழிபட்டால் அந்த ஊர் மக்களைக் காத்து நிற்பார் என்று அருள்வாக்கு கூறுகிறார்.
அதன்படியே ஜமீன்தார், ஊர்மக்களின் ஆதரவோடு இந்தக் கோவிலைக் கட்டி சாஸ்தாவை பூர்ணா மற்றும் புஷ்கலை உடன் பிரதிஷ்டை செய்தார் என்றும் அருள்வாக்கில் கூறியபடி இருபத்தியொரு காவல் தெய்வங்களுக்கும் பூடம் அமைத்து வழிபட்டார் என்றும் இந்தக் கோவிலின் வரலாறு கூறப்படுகிறது.
காவல்தெய்வம் கொம்புமாடசாமி சிறப்பு:
இந்தக் கோவிலில் காவல்தெய்வமாக விளங்கும் கொம்புமாடசாமி மிகவும் பிரசித்தி பெற்றவர் ஆகும்.
முற்காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த பெண்ணொருத்தி, சுடலைமாடசாமி மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள்.
அவரை தன் குலதெய்வமாகக் கருதி வழிபாட்டு வந்தாள்.
தனது வறுமை காரணமாக அந்த ஊரில் இருந்த செல்வந்தர் ஒருவரின் தோட்டத்தில் கூலிக்கு வேலை செய்து வந்தாள்.
ஒருநாள் வேலைமுடிந்து வீட்டிற்கு செல்லும்போது அவளுடைய முதலாளி அவளுக்குரிய கூலிப்பணத்துடன்
தனது தோட்டத்தில் விளைந்த சில கத்திரிக்காய்களையும் கொடுக்க, அதனை வாங்கிக்கொண்டு தனது வீட்டிற்கு காட்டு வழிப்பாதை வழியே சென்று கொண்டிருக்கும்போது இன்னொரு தோட்டத்திற்கு சொந்தமான செல்வந்தர் ஒருவர் அந்த வழியாக வருகிறார்.
கத்திரிக்காய்களுடன் நடந்து செல்லும் இந்தப் பெண்ணைப் பார்த்ததும் அந்தச் செல்வந்தர் தனது தோட்டத்திலிருந்து தான் கத்திரிக்காய்களை திருடிச் செல்கிறாளென நினைத்து, அவளைக் கடிந்து கொண்டார்.
அந்தப் பெண்ணோ ஐயா இது என் முதலாளி அவர் தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய்களை எனக்குக் கூலியாகத் தந்தது எனக் கூறுகிறாள்.
அதனை நம்ப மறுத்த அந்தச் செல்வந்தர் அந்தப் பெண்ணின் மீது கோபம் கொள்ள, அந்தப் பெண்ணோ ஐயா நான் வணங்கும் என் குலசாமி சுடலைமாடன் சாமிமீது சத்தியமாக நான் இந்தக் கத்திரிக்காய்களை திருடவில்லையென அழுதுகொண்டே கூறுகிறாள்.
ஆனாலும் அந்தச் செல்வந்தர் விடுவதாக இல்லை, மேற்கொண்டு அவளை விடாமல் உன் குலசாமி சுடலைமாடனுக்கு என்ன ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு, அவரு வந்து என்ன சாட்சியா சொல்லப் போகிறாறென ஏளனம் செய்கிறார்.
அந்தப் பெண் நிச்சயம் என் சாமி எனக்குத் துணை நிக்கும், நீங்க இன்னைக்கு ஒருநாள் ராத்திரி மட்டும் பொறுமையா இருங்க, நாளைக்கு காலை விடியுறதுக்குள்ள என் சாமி எனக்குச் சாட்சி சொல்ல ஏதாவது அறிகுறி காட்டும் எனச் சொல்லி அவரைச் சமாதானம் செய்து தனது வீடு வந்து சேர்ந்து தன் குலசாமி சுடலைமாடசாமியை வணங்கிவிட்டு உறங்கி விடுகிறாள்.
மறுநாள் காலை விடிந்தவுடன் பார்த்தால், இந்தப் பெண்ணிடம் கோபம் கொண்ட செல்வந்தரின் தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய்களில் எல்லாம் கொம்பு முளைத்து இருந்ததாம். அதோடு மட்டுமில்லாமல் கோவிலுக்குள் வீற்றிருந்த சுடலைமாட சாமியின் தலையிலும் இரண்டு கொம்புகள் முளைத்திருந்ததாம்.
இதனைக்கண்ட ஊர்மக்கள்,மற்றும் அந்தச் செல்வந்தர் என அனைவரும் சுடலைமாடசாமியின் சக்தியை உணர்ந்து பணிந்து நின்றனர்.
செல்வந்தர் அந்தக் கூலி வேலை செய்யும் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு, அவளுக்குப் பல வெகுமதிகளை வழங்கிப் பெருமைப்படுத்தினார் என்றும் ஒரு செவிவழிக்கதை கூறப்பட்டு வருகிறது.
அன்று முதல் இவர் கொம்புமாடசாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
மறுகால்தலை ஊர் பெயர் வரக்காரணம்:
ஸ்ரீ வல்லப பேரேரி (சீவலப்பேரி) என்னும் ஏரியின் மறுகால் பாயும் தலைப்பகுதியாக இந்தப் பகுதி என்பதாலும், ஏரியின் மறுகால் பகுதியில் சுவாமியின் தலை இருந்ததாலும் இந்த ஊர் மறுகால்தலை என்று வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பூலுடையார் சாஸ்தா பெயர் காரணம்:
முன்னர் சேரநாட்டில் பூலாத்தி செடிகளுக்கு இடையே இருந்து கண்டெடுக்கப்பட்டவர் என்பதால் இந்தச் சாஸ்தா பூலாத்தி செடி இடை கண்டெடுத்த சாஸ்தா என்றும் பூலாத்தி இடை சாஸ்தா என்றும் அழைக்கப்பட்டு பின்னர் பூலுடையார் சாஸ்தா என மறுவியதாகக் கூறப்படுகிறது.
திருக்கோவில் அமைப்பு:
இந்தப் பூலுடையார் சாஸ்தா கோவில் மலைக்குன்றின் மீது அமையப்பெற்றுள்ளது.
கீழ் இருந்து மேலே கோவிலுக்குச் செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைக்குக் கீழே உள்ள கோவிலில் சிவனணைந்த பெருமாள், கருப்பசாமி, பலவேச கருப்பசாமி, தளவாய்மாடன், சப்பாணி மாடன், பட்டவராயன், கொம்பு மாடன், கொம்பு மாடத்தி ஆகிய காவல் தெய்வங்களும், மலைக்கு மேலே உள்ள கோவிலில் கருவறை மூலவராகப் பூரணை, புஷ்கலை உடனுறை பூலுடையார் சாஸ்தா மற்ற பரிவார மூர்த்திகளுடன் வீற்றிருக்கிறார்.
திருக்கோவில் சிறப்புகள்:
முன்னர் இந்தச் சுவாமி விக்கிரகத்தைச் சேரநாட்டிலிருந்து கொண்டு வரும்போது, சுரைக்காய் கொடி காலை இடறிவிட்டு விக்கிரகம் பின்னம் அடைந்ததால், இவரைக் குல சாஸ்தாவாக வணங்கும் குடும்பத்தினர் யாரும் சுரைக்காயை தங்கள் உணவில் சேர்த்துக்
கொள்வதில்லையெனக் கூறப்படுகிறது.
இங்குள்ள சாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்ய, இங்கிருந்து 6 கி.மீ
தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இதற்காக இந்தக் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் குடும்பத்தினர் தினம் ஒருவராக, செம்பு குடத்தில் தாமிரபரணியில் இருந்துதாமிரபரணியிலிருந்து தீர்த்தம் எடுத்துத்
தங்கள் தலையில் சுமந்து நடந்தே கோவிலுக்கு வருகிறார்கள்.
மணியாச்சி ஜமீனை சேர்ந்த குடும்பத்தினருக்கும், அந்த ஊர் மக்கள் பலருக்கும் இந்தப் பூலுடையார் சாஸ்தா
குல சாஸ்தாவாக விளங்குகிறார்.
பங்குனி உத்திரம்
அன்று இங்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நேர்த்தி கடன்களைச் செலுத்தி தங்கள் குல தெய்வத்தையும், குல சாஸ்தாவையும் வணங்கி அருள் பெறுகின்றனர்.
ஸ்ரீபூலுடையார் சாஸ்தா, தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு புத்திர பாக்யம் அருள்கிறார்.
இருப்பிடம்/செல்லும் வழி:
திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார்
18 கி.மீத்தொலைவில் அமையப்பெற்றுள்ள சீவலப்பேரி என்னும் ஊரை அடுத்து மலைமீது இந்தப் பூலுடையார் சாஸ்தா கோவில் அமையப்பெற்றுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து புளியம்பட்டி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன.
பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் பேருந்து நிலையத்திலிருந்து சீவலப்பேரி வழியாக மறுகால்தலைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.