மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அலோசனை கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவல்களையும் காணொலிக்காட்சி மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் நாட்டில் அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானும் இணைந்துள்ளார்.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 61 வயதாகும் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைநகர் போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், என் அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன, இதனை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது.
என்னுடன் யார் தொடர்பில் இருந்தவர்களும், கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், என பதிவிட்டுள்ளார்.